தூத்துக்குடி,தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி 3வது நெய்தல் கலை விழா 2024 & உணவுத் திருவிழா தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் கோலாகலமாகத் துவங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஸ்பிக் குழுமத்தின் முழுநேர இயக்குநர் பாலு, நபார்டு வங்கி பொது மேலாளர் ஜோதி ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
முதல் நாளான இன்று (11/10/2024) தொடக்க நிகழ்ச்சியாகத் தூத்துக்குடி இசைப் பள்ளி சார்பாக மங்கள இசை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஜமீன் கோடாங்கிபட்டி குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு மற்றும் பால் ஜேக்கப் ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சிகளுடன், பறைஆட்டம், கனியன் கூத்து உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பங்களுடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா கோட்டாட்சியர் பிரபு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தூத்துக்குடி நெய்தல் ஆண்டோ நன்றியுரை ஆற்றினார்.
உணவுத் திருவிழா:
நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளின் தனித்துவமான உணவுகள் எனப் பலவகையான உணவுகளை மக்கள் உண்டு மகிழும் வகையில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளது. மேலும், நபார்டு சார்பாக 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, அதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள் போன்ற தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த கலை திருவிழா மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

