December 1, 2025
#விளாத்திகுளம்

அறநிலையத்துறையை கண்டித்து விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் அறநிலையத்துறையை கண்டித்து விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம் அருகே கீழ விளாத்திகுளம், கத்தாளம்பட்டி கிராம விவசாயிகள் பெயரில் பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை 553 ஏக்கர் நிலங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும்,

இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி தமிழக அரசால் வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டா நிலத்தை விவசாயிகளிடமிருந்து அபகரிக்கக்கூடாது,

விவசாயிகளை விசாரணை என்ற பெயரில் வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர்அலுவலகம் என அலைய விடக்கூடாது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா குழு, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழவிளாத்திகுளம், கத்தாளம்பட்டி விவசாயிகள் சார்பில் விளாத்திகுளத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை வகித்தார். லட்சுமணப்பெருமாள், மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் ராகவன், தாலுகா தலைவர் ராமலிங்கம் மற்றும் கீழ விளாத்திகுளம், கத்தாளம்பட்டியைச் சேர்ந்த முருகன், ராமமூர்த்தி, பெரியசாமி, குருமூர்த்தி, சோலைராஜ், ஆத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.