December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

வாக்களிக்க இயலாத மக்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி! இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகளை திறந்து வைத்த கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி,சிலுவைப் பட்டியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 56 குடியிருப்புகளை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில், கனிமொழி கருணாநிதி எம்பி, திறந்து வைத்தார்.

by;CN அண்ணாதுரை

தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகள் திறப்பு விழா 04.10.24 இன்று நடைபெற்றது.

ரூ. 3.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 56 குடியிருப்புகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் பாலகிருஷ்ண மூர்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி;
முகாமின் பெயர் கூட புலம்பெயர்ந்த மக்களுடைய மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக் கூடாது என்ற மறுவாழ்வு முகாம்கள் என்று பெயரை மாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் எந்த நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு லட்சக்கணக்கான வீடுகள் கட்டி தருவதற்கான திட்டத்தை வகுத்து, இன்று மிகச் சிறப்பான அளவில் நமக்கு வீடு கட்டி தந்திருக்கக் கூடிய முதல்வருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக, என் தொகுதியின் சார்பிலும், உங்களது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல ஒரு முகாமில் இருக்கக்கூடிய ஒரு இளம் பெண்ணை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த பொழுது அந்த பெண் ஒரு கேள்வி கேட்டார். படி படி என்று சொல்கிறார்கள்? நான் படித்த பிறகு என்ன பண்ணமுடியும் என்று? முகாம்களில் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது வாய்ப்பே இல்லதா ஒன்றாகத்தான் இருந்தது. என்ன படித்தாலும் வேலை வாய்ப்பு என்பது கஷ்டமான ஒன்றாக இருந்தது. ஆண்கள் பல ஊர்களுக்குச் சென்று கூலி வேலை செய்யக் கூடியவர்களாக இருந்தனர். பெண்களுக்கு கைத்தொழில் தாண்டி, என்ன படித்தாலும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர திறன் மேம்பாட்டு (Skill Development) பயிற்சி கொண்டு வந்து, நீங்களும் படித்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திகழ்கிறது, உங்களுக்கு உறுதுணையாக தொடர்ந்து இருக்கக்கூடிய ஆட்சி.

குடியுரிமைக்காக ஒன்றிய அரசாங்கத்தோடு தொடர்ந்து நாம் பேச்சுவார்த்தை நடத்தி போராடிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அவர்களுடைய அடுத்த தலைமுறையை பாதுகாக்க கூடிய வகையில் வீடு, வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தும், முன்னர் கலைஞர் ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் படிக்க கூடிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்ததும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

இன்று நீட் போன்ற பல தேர்வுகளால், மருத்துவ கல்லூரிகளில் படிக்க கூடிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த மக்கள் இக்கட்டான நிலையில் தங்களுடைய நாடு, சொந்தம், சுற்றத்தார் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இன்னொரு இடத்தில் புலம்பெயர்ந்து, அங்கே வாழ வேண்டிய நிலையில் இருக்கும் பொழுது, ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னோரிடத்தில் வைக்கக்கூடிய அந்த நிலையில் இவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள் அவர்களின் மன உளைச்சல்களை புரிந்து கொண்டு, அவர்களுக்காக முகாமை அமைத்து, தொலைபேசி எண்ணை வழங்கி, நாங்கள் இருக்கிறோம் என்று முன் வரக்கூடிய ஒரு திட்டத்தை மென்டல் ஹெல்த் பாலிசி (Mental health policy) அமைத்த துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொதுவாக மெண்டல் ஹெல்த் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், இந்த மறுவாழ்வு மையங்களில் வாழக்கூடிய மக்களுக்கு, இருக்கக்கூடிய பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு ஒரு அருமையான திட்டத்தை செயல் வடிவம் கொடுத்துள்ளார்கள்.

இந்த மண்ணில் நீங்கள் எங்களைப் போல எல்லோரையும் போல வாழ உரிமை பெற்றவர்கள் என்ற மனநிலையை உருவாக்கித் தந்த ஆட்சி திமுக. முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்குக்காண ஆட்சியாக இருக்கும் என்றார். அதையும் தாண்டி, வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் என்று நிலைநாட்டி இருக்கிறார் முதலமைச்சர் என்று பேசினார்.
முன்னதாக கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர், முகாம் வாழ் தமிழர் நலன் காக்கும் சிறப்பு மனநல மருத்துவ சேவைகள் என்ற விளம்பர பதாகையை வெளியிட்டனர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் இரா.ஐஸ்வா்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோட்டாட்சியர் பிரபு, டவுன் ஏஎஸ்பி மதன், வட்டாட்சியர்கள் முரளிதரன், சுரேஷ்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் மாநில திமுக மாணவரணி இணை செயலாளர் பூவை ஜெரால்டு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு , மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி பொன்பாண்டி, முன்னாள் ஆவின் சேர்மன் சுரேஷ் குமார், கிளை செயலாளர் அன்புரோஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிலுவைப் பெட்டி முத்து சிலம்ப கூடம் மாணவர்களின் வீர விளையாட்டுக்கள் நடைபெற்றன.
நிறைவாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுதுறை இணை இயக்குனர் ரமேஷ் நன்றி கூறினார்.