December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி அய்யனடைப்பு பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு!

அய்யனடைப்பு பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யனடைப்பு பஞ்சாயத்து ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு பஞ்சாயத்து ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்.
இம் மனுவில்;
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாய கூலி வேலைகள், மற்றும் மகாத்மா காந்தி 100 நாள் வேலையை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இந்த அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அப்படி இணைக்கும் பட்சத்தில் இங்கு வசிக்கும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிய நம்பிக்கையாக இருக்கும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும் நிலை உள்ளது. மேலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களான நான் முதல்வன் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் இப்பகுதி பஞ்சாயத்து மக்களுக்கு பறிபோகும் நிலை ஏற்படும். மேலும் குடிநீர் கட்டணம் வீட்டு வரி கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் நிலை உள்ளது எனவே இப்பகுதி ஆதி திராவிடர் மக்களின் நலன் கருதி மேற்படி அய்யனடைப்பு ஊராட்சியை அருகில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட்டு மக்களின் நலம் கருதி மீண்டும் பஞ்சாயத்து ஆகவே செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதில் அய்யனடைப்பு பஞ்சாயத்து 8வது வார்டு உறுப்பினர் பெரிய பிராட்டி, 9வது வார்டு உறுப்பினர் ஜெயா கோபால், 2வது வார்டு உறுப்பினர் இளமதி செல்வி மற்றும் ஊர் பெரியவர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.