ஈ.சங்கரநாராயணன்
பொறுப்பாளர், தமிழாசிரியர்
அன்றாட நடப்புகள் என்றோ ஒரு நாள் சூடு பறக்கப் பேசப்படுகிறது (வைரலாகிறது).
மகாவிட்ணு – ஆசியர் சங்கர் நிகழ்வும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்.
அரசுப் பள்ளிக்கு அப்போதைக்கு அப்போது யார்யாரெல்லாமோ வருவாங்க. வகுப்பில் இருக்கும் பாட ஆசிரியரை வெளியே போகச் சொல்லிவிட்டு, கரும்பலகையைப் பயன் படுத்தி வெளியில் இருந்து வந்தவர் பாடம் சொல்லத் தொடங்கிவிடுவாங்க.
அவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பர முகவர்களாகவும் இருக்கலாம்; இதுபோன்ற மகாவிட்ணுக்களாகவும் இருக்கலாம்.
அரசுப் பள்ளியில் பயிலும் ஏழைய எளிய மாணவர்கள் எப்படியாவது ஒரு பட்டப் படிப்பை படித்துவிட்டால் போட்டித் தேர்வு எழுதி அரசுப் பணிக்குப் போகலாம்; சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் 7.5% வாய்ப்பைப் பயன் படுத்தி மருத்துவம் வரைப் படிக்கலாம், இ.ஆ.ப தேர்வு வரை செல்லலாம் என்று மாணவர்களின் குடும்ப வருமானம் உள்ளிட்ட போக்கறிந்து அப்பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டியிருப்பர்.
ஆனால் வெளியிலிருந்து அனுப்பப்பட்ட மகாவிட்ணுக்கள், தனியார் செவிலியர் கல்லூரிகளிலும், தனியார் தொழிப் பயிற்சி நிறுவனங்களிலும் சேர்வதற்கு, நாங்களே உதவித் தொகை பெற்றுத் தருகிறோம் என்பது உள்ளிட்ட மயக்க மருந்துகளைக் கொடுத்துவிடுவர். தேக்கநிலை ஏழை மாணவர்களைக் கல்விக் கடனை நாங்களே பெற்றுத் தருகிறோம் என்று ஆசை காட்டி கூட்டிச் செல்வர். இறுதியில் குடும்பத்திற்கு இருந்த ஒரு வயலையும் பிடுங்கி நடுத்தெருவில் நிறுத்திவிடுவர்.
சங்கரைப் போன்ற அரிதினும் அரிதான மான உணர்ச்சியும் முதுகெலும்பும் உடைய எங்கேனும் எவரேனும் ஓர் ஆசிரியர்,
என் பாடம் பாதிக்கும் என் பாடவேளையைத் தரமுடியாது என்று கூறினால், நான் அனுமதி பெற்றுத்தான் வந்துள்ளேன் என்பர்.
யார் அனுமதி தந்தார்? எனக் கேட்டால் முதன்மைக் கல்வி அலுவலர் தந்தார்; தலைமை ஆசிரியர் தந்தார் என்பர்.
தனியார் விளம்பரத்திற்கு என் பாடவேளையைத் தர முடியாது என்று கூறினால், கீழ்ப்படியாமை என்ற செம்பைத் தூக்கி வருவார்கள்.
இது மட்டுமன்று, தனியார் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட அரசுப் பள்ளி மாணவர்கlளை அப்போதைக்கு அப்போது எவரிடமும் அனுமதி பெறாமல், பெற்றோரிடமும் கேட்காமல், அழைத்துச் செல்வர். எதற்காக அழைத்துச் செல்கிறார்கள்? சொல்லாமலே புரியும்!
மாணவர்களைப் பாடப் பொருள் சார்ந்து, கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்று சங்கரைப் போன்ற ஆசிரியர்கள், தலைமை ஆசியரிடம் போய் கெஞ்சிக் கேட்டாலும் அனுப்ப ஏற்பாடு செய்துதர மாட்டார்கள். ஏன்? சங்கரைப் போன்றவர்கள் 20% வெட்டமாட்டார்களே!
தமிழ்க் கூடல் நிகழ்ச்சிக்கு அரசாங்கம் கொடுத்த ஒன்பதாயிரம் பணமே பல பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏப்பம் விட்டுவிட்டனர்.
கட்டாயப்படுத்தி, உரிமைப் போர் தொடுத்து, தலைமை ஆசிரியருக்கே ஒப்புகைப் பதிவஞ்சல் கடிதம் எழுதித்தான்,
திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணத்தையும் அனுமதியையும் பெற முடிந்தது.
அரசாங்கம் கொடுக்கும் அவ்வளவு பணத்தையும் வாங்கி வாயில் போட்டுவிட்டும், மாணவர் ஒருவருக்கு 370 உரூபா வரைக்கு தண்டலும் செய்துவிட்டு, திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கழிவறையில் பல நாள்கள் தண்ணீர் வழங்குவதில்லை.
இது தொடர்பாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவரே தலைமை ஆசிரியருக்கு ஒப்புகைப் பதிவஞ்சலில் சரிசெய்யக்கோரிக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தண்ணீர் இல்லாமல், ஒரு நாள் வயிறு வலியில் துடித்த மாணவிகள், வெளியில் பாதுகாப்பாக உள்ள கழிவறைக்குப் போய் வருமாறு அனுப்பி வைத்தார்.
அவ்வாசிரியர், நடுக்கல்லூரில் இருந்து
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கும் காரணங்களில் இவையும் அடங்கும்.
சமூக அக்கறைகொண்ட ஆசிரியர் சங்கர்கள் பலர் அரசாங்கத்தின் எதிரிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர்.
விட்ணுக்களும், கழிவறையைப் பேணும் வேலையைக் கூடச் செய்யாமல் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையைத் தொடரும் தலைமை ஆசிரியர்களும் நல்லாசிரியர்களாக உலா வருகின்றனர்!
ஈ.சங்கரநாராயணன்
பொறுப்பாளர், தமிழாசிரியர் முன்னணி. 9965868114

