தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று 05.8.2024 (திங்கட்கிழமை) பனிமய மாதாவின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய 442-வது ஆண்டு பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள், பொது நிலையினர், துறவியர், நோயாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. மாலையில் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.
3-ம் திருவிழாவான கடந்த மாதம் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் மாபெரும் நற்கருணை பவனி நடந்தது. 10-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து பல்வேறு திருப்பலிகள் நடந்தன. இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் மறைமாவட்ட மக்களுக்கான சிறப்பு திருப்பலியும், காலை 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் அருட்தந்தையர்கள், துறவியர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெற்றது.
இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று அங்கு வருகை தந்து பனிமய மாதாவை வணங்கி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் எல்லா துறையிலும் வளர்ச்சி பெறவும், அனைத்து தரப்பினரும் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழவும் பிரார்த்தனை மேற்கொண்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, வட்ட செயலாளர் டென்சிங், பகுதி தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் சுரேஷ்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும், மாலை 3 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
இந்த திருப்பலி முடிந்ததும் இரவு 7 மணிக்கு மேல் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பனிமய மாதா நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வரப்படுவார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவிப் பங்குத்தந்தை பாலன், அருட்சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர், பக்த சபையினர், இறைமக்கள் செய்துள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு, நெல்லை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மாநகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவை முன்னிட்டு பொருட்காட்சி, கடை வீதிகளில் சிறப்பு தள்ளுபடி விற்பனை என தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

