தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் லட்சுமிபதி தெரிவிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமத்தைச் சார்ந்த மீனவர்கள் அளித்த கோரிக்கைகளை மீனவர்கள் மத்தியில் எடுத்துரைத்து அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டு உரிய பதில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாருதல், மீனவ கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், கடலில் மீனவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிட ஏதுவாக முழு மருத்துவ வசதியுடன் கூடிய பைபர் படகுகள் மற்றும் கடற்கரையோரம் மருத்துவ அவசர ஊர்தி வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பிறதுறைகளின் மூலமாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மீனவர் கடன் அட்டை(முஊஊ)-யின் சிறப்பம்சங்கள், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மீனவர்களுக்கான பயிற்சிகள் குறித்து, அதாவது விசைப்படகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பயிற்சி, மீனவ மகளிர்களுக்கான மீன்பிடிவலை பின்னல் பயிற்சி, முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி, மீன் வகைகளை மீன் கட்லட், மீன் சூப், மீன் பஜ்ஜி, கருவாடு, மீன் ஊறுகாய் போன்ற மதிப்புக் கூட்டுப்பொருட்களாக தயாரிப்பதற்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து விதமான புத்தகங்கள் தூத்துக்குடி அறிவுசார் மையத்தில் உள்ள நூலகத்திலும், வ.உ.சி. கல்லூரி அருகில் உள்ள படிப்பகத்திலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தங்களது கிராமங்களில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியர்கள், இளைஞர்களை நூலகத்திற்கு சென்று பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 8ம் தேதி முதல் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிவகுப்புகள் நடைபெறஉள்ளது. இதைதவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தங்களது கிராமத்தில் உள்ளமாணவ, மாணவியர்கள், இளைஞர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (கூஃபொ) காசிநாதபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ராஷப்னம், மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் விஜயராகவன், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் மீனவ பெருமக்கள் கலந்து கொண்டன
ர்.

