தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 875, குளம், கண்மாய்,குட்டை மற்றும் ஊரணி வண்டல் மண்/மண் எடுப்பதற்கு ஏதுவாக( Removal of clay and silt) தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடு எண் 3, நாள் 01.07.2024-ல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வண்டல் மண்/மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஊரக வளர்ச்சிமற்றும்ஊராட்சித்துறை,
நீர்வளத்துறை செயற்பொறியாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர், வருவாய் வட்டாட்சிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது.
அதன் விபரம்:-விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை http://www.tnesavai.tn.gov.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு வரப்பெறும்விண்ணப்பங்களை வருவாய் வட்டாட்சியர்கள், புல எண், பரப்பளவு, நில வகைப்பாடு மற்றும் உண்மைத் தன்மை குறித்து சரிபார்த்து விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 10 (பத்து) நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்/மண் எடுப்பதற்கு வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும்.
மண்பாண்டத் தொழில் செய்பவர்கள் மண் எடுக்க இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு இணையத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் பரிசீலனை செய்து அனுமதி அளிப்பதற்கு அல்லது நிராகரிப்பதற்கு தொடர்புடைய வருவாய் வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மேற்படி அனுமதியானது, விவசாய நில மேம்பாட்டிற்காக நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஓன்றுக்கு 75 க.மீ ஹெக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டர் என்ற அளவிற்று மிகாமலும்,
புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டர் ஹெக்டேர் ஒன்றுக்கு 222 க.மீட்டர் என்ற அளவிற்கு மிகாமலும்,
மண்பாண்டத் தொழில் செய்வதற்கு 60 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண். எடுத்துக் கொள்ள இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை அனுமதி வழங்கப்படும்.
வருவாய் வட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைக்கப்பெற்ற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி புல வரைபடத்தின் வண்டல் மண்/மண் எடுப்பதற்கு வரையறை செய்யப்பட்டுள்ள பகுதியில். தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டும் தங்களுடைய வாகனம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் மட்டும் வண்டல் மண்/மண் எடுத்துச் செல்லலாம்
மண் எடுத்துச் செல்லும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வண்டல் மண்/மண் எடுத்துச் செல்ல வேண்டும்.இரவு நேரங்களில் கண்டிப்பா அனுமதி இல்லை.
எனவே, விவசாயிகள்மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல் மண்/மண் எடுத்துச் சென்று விவசாய நில மேம்பாட்டிற்காக மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக தங்களது விண்ணப்ப மனுக்கள் உரிய ஆவணங்களை www.tnesavai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என்ற விபரம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

