December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி திமுக வழக்கறிஞர் அணி புகார்

தூத்துக்குடி:தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை குறித்து அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்திய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி தூத்துக்குடி ஏ.எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில், மாநகர் திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வி லட்சுமி தலைமையில் ஏ.எஸ்.பியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியதாவது:

கடந்த 3 ம் தேதி கோவையில் நடந்த மாணவி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து, 6 ம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் பாஜக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் அனுசியா, முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை குறித்து பொய்யான, அவதூறான மற்றும் அநாகரிகமான வார்த்தைகள் கூறினார்.

இந்த உரையை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தாரங்கன், தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் வெள்ளத்தாய் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் உமாசெல்வி ஆகியோர் தூண்டுதலாக ஏற்பாடு செய்ததாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக வழக்கறிஞர் அணி மனுவில் கோரியுள்ளது.

பின்னர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி கூறுகையில்,

“முதலமைச்சரின் மனைவியை அவமதிக்கும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் பேச்சுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும்,” என்றார்.

மேலும் மாநகர திமுக துணை செயலாளர் பிரமிளா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ இளம்பதி, துணை அமைப்பாளர் ரூபராஜா, வக்கீல்கள் கிறிஸ்டோபர் விஜயராஜா, அமுதவல்லி, அனிதா, தொண்டரணி துணை அமைப்பாளர் ஐயம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.