December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனின் புதிய வகையான தேர்தல் பிரச்சார யுக்தி பயன் தருமா.!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஏற்கனவே வாக்காளர்களை கவரும் பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் சார்பில், சமீப நாட்களாக வீடுதோறும் தபால் அனுப்பி வாக்காளர்களை, குறிப்பாக பெண்களை, கவரும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகர திமுக பெயரில் அனுப்பப்பட்டுள்ள இந்த தபால்களில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மக்களுக்காக மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் முக்கியமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.தபாலில், “தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியுள்ளது. இதுபோன்ற பல புதிய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்பட, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு தங்களை பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தபால் தற்போது தூத்துக்குடி முழுவதும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

அமைச்சர் கீதா ஜீவன் எடுத்துள்ள இந்த “தபால் யுக்தி”

தேர்தல் பிரச்சாரத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.