December 1, 2025
#திருச்செந்தூர்

கந்தசஷ்டி திருவிழாவிற்கு வாகன பாஸ் இல்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டித் திருவிழாவை முன்னிட்டு, வாகனங்களுக்கு தனிப்பட்ட சிறப்பு அனுமதி அட்டைகள் (Vehicle Pass) வழங்கப்படமாட்டாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான கந்தசஷ்டித் திருவிழா அக்டோபர் 22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 28 வரை நடைபெறுகிறது. இதில் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழா, 28ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சி, மாலை 6 மணிக்கு மாலை மாற்று விழா, இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

ஆனால், சமீபத்திய கனமழையால் வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், 27ஆம் தேதி மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி திருச்செந்தூர் கந்தசஷ்டித் திருவிழாவிற்கு வருமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சூரசம்ஹார நிகழ்வுக்காக எந்தவித வாகன சிறப்பு அனுமதி அட்டையும் வழங்கப்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.