தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி பகுதியில் இன்று (22.10.2025) காலை சாலை மறியலில் ஈடுபட்டு, பேருந்துகளை வழிமறித்து போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பொட்டலூரணி கிராம மக்கள் சார்பாக அரசு, இடைநில்லா, குளிர்சாதன மற்றும் தனியார் பேருந்துகள் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல வேண்டும் எனவும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கிராம மக்கள் பராமரிக்கும் பதிவேட்டில் தினசரி கையொப்பமிட்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி சங்கரநாராயணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள், வேலைக்குச் செல்லும் மக்கள், பயணிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து, புதுக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் துரிதமாக சீரமைத்தனர்.
இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 03.09.2025 அன்று நடைபெற்ற போராட்டத்தையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், 21.10.2025 அன்று மீண்டும் சாலை மறியல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து, திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில் வட்டாட்சியர், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மற்றும் சங்கரநாராயணன் தலைமையில் கிராமத்தைச் சேர்ந்த 23 பேர் கலந்து கொண்டனர். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என வட்டாட்சியர் எச்சரித்திருந்தார்.
ஆனால் எச்சரிக்கையை மீறியும் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால், சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளது.

