December 1, 2025
#தூத்துக்குடி

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் ஜெகன், ஆணையர் ப்ரியங்கா அதிரடி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகராட்சி பகுதிகளில் 2023ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மீண்டும் நிகழாதவாறு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆலோசனையிலும், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் மேற்பார்வையிலும், மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜெகன் பொியசாமி தனிப்பட்ட முறையில் இருசக்கர வாகனத்தில் நகரைச் சுற்றி, மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மில்லர்புரம், பால்பாண்டி நகர், நிகிலேஷன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள ஓடையை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து பார்வையிட்டார். அங்கு சில இடங்களில் கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டு, உடனடியாக அந்த வீட்டு உரிமையாளர்களை அழைத்து, அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

மேலும் ராஜகோபால் நகர், ராஜீவ் நகர், அசோக் நகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்ததை ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்காவுடன் சேர்ந்து 4-ம் கேட் பகுதி மற்றும் சங்கரபுரம் ஜி.பி. காலணி பகுதியில் நடைபெற்று வந்த மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில்:

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களுக்குள் நகரில் நீர் தேங்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு. அதற்காக முழுமையான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், ஜான், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், வேல்முருகன், ஆணையர் அலுவலக உதவியாளர் துரைமணி, மேயர் அலுவலக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மழைநீர் ஆய்வின்போது மேயர் ஜெகன் பொியசாமி இருசக்கர வாகனத்தில் மக்களிடம் குறைகள் கேட்ட சம்பவம் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.