தூத்துக்குடி:வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளில் தூத்துக்குடி நகரில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்தியது. சில இடங்களில் நீர் தானாகவே கடலுக்கு சென்றது. ஆனால் 3-ம் மைல் பகுதியில் நீர் தேங்கிய நிலையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு பாலிடெக்னிக் எதிரே உள்ள ஒரு பிரபல ஹோட்டல் செப்டிக் டேங்க் அமைக்காமல் இறைச்சி கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விடப்பட்டதாக தெரியவந்தது. இதனால் சுமார் 30 அடி நீளத்துக்கு கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தில் சிமெண்ட் பிளேட்களை அகற்றி கானுக்குள் தேங்கியிருந்த பாறை போல் உறைந்த கழிவுகளை அகற்றினர். ஒரு லாரி அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் ஹோட்டல் சீல் செய்யப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது
: தனியார் திருமண மண்டபங்கள், பிரபல ஹோட்டல்கள் மனித மற்றும் இறைச்சி கழிவுகளை நேரடியாக கழிவுநீர் கால்வாய்களில் விடுவது சட்டப்படி குற்றமாகும் மேலும் இது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர். தற்போது மாநகராட்சி நிர்வாகம் இந்த விதிமுறைகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இதனை வரவேற்று வருகின்றனர்.

