தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டசபை நிகழ்ச்சியில் இருந்த அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தூத்துக்குடி மழை நிலவரத்தை தெரிவித்ததையடுத்து, அவரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தார்.
பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பி & டி காலனி, கோக்கூர், கதிர்வேல்நகர், திரேஸ்புரம், இன்னாசியபுரம், இருதயம்மாள்புரம், முத்தையாபுரம், தங்கம்மாள்புரம், தோப்புத்தெரு உள்ளிட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உயர்தர மின் மோட்டார்களின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஆண்டுகளை விட இம்முறை நீர்த்தேக்கம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் சிவகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

