December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் 174 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் – காணொளி வழியாக உரையாற்றும் முதலமைச்சர்

தூத்துக்குடி, அக்.10:

கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்து, தேவைகளை அரசு வழியாகப் பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு அக்டோபர் 2 அன்று பண்டிகை காரணமாக நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக நாளை (அக்டோபர் 11) மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளைய தினம் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் காணொளிக் காட்சி (VC) வாயிலாக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் (OFC) உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் நேரடி காணொலி உரையாடல் நடத்தவுள்ளார். இது மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 11,800-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை கம்பி (OFC) வழியாக இணைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் OFC வழியாக இணைக்கப்பட்டுள்ள 174 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கொடுக்காம்பாறை ஊராட்சியிலும்,

மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் அயன்பொம்மையாபுரம் ஊராட்சியிலும் கலந்து கொள்ள உள்ளனர்.