தூத்துக்குடி:கடந்த 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் வீடுகள் மற்றும் சொத்துகளை இழந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான புதிய வீடுகளை கட்டி வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கால்வாய் மற்றும் செம்பூர் நாணல் காடு பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீடுகள் வழங்கப்பட்டதோடு பயனாளிகளுக்கு பசுமாடுகள் வழங்கப்பட்டன.
செல்வமகள் சேமிப்பு;
மேலும், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.அதேபோல், நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துச் சின்னங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை நைனார் நாகேந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், அணிப்பிரிவு நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

