December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டா ரத்து விவகாரம் – முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் மனு

தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து, அதைச் சுற்றியுள்ள வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்களின் புகாரின் பேரில், அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் :

“தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் உள்ள காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளி தென்பகுதியில் குழந்தை ஏசு கோவில் என்ற சிற்றாலயம் உள்ளது. அதன் முன்புறம் மேற்கு கிழக்காக செல்லும் ஒரு சந்து ரோட்டில் 15 வீடுகள் உள்ளன. இந்த ரோடு கிழக்கு திசையில் லயன்ஸ் டவுன் 4, 5, 6வது தெருக்களின் பிரதான சாலையில் சந்திக்கிறது. அந்த சந்திப்பு சாலை தெற்கு திசையாக சென்று கடைசியில் மீண்டும் கிழக்கு மேற்காக சென்று பிரதான தெற்கு காட்டன் ரோட்டில் இணைகிறது. இந்த ரோட்டை ஒட்டிய பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. அதேபோல் குழந்தை ஏசு கோவில் அருகிலுள்ள தெற்கு காட்டன் பிரதான சாலை தெற்கே சென்று உப்பளங்கள் உள்ள இடத்தில் முடிவடைகிறது. இந்த பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. இப்படியாக மொத்தம் 55 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

1951ம் ஆண்டுகளில் இந்த பகுதி முழுவதும் மத்திய அரசின் உப்பு இலாக்காவிற்கு சொந்தமான உப்பு உற்பத்தி செய்யும் இடமாக இருந்தது. இந்த 3 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை கைத்தான் வில்லவராயர் குத்தகைக்கு பெற்று அனுபவித்து வந்தார். அவர் காலத்தில் பல வீடுகள் அமைந்திருந்தன.பின்னர் அவரது மகன் சூசையா வில்லவராயர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் குடியிருந்து வரும் மீனவ மக்களுக்கு கருணையுடன் அந்த நிலத்தை நன்கொடையாக வழங்கினார். மக்கள் பெரும் பணம் செலவு செய்து வீடுகளை கட்டினர். மாநகராட்சி சார்பில் சர்வே நடத்தி, 10(1) அடிப்படையில் பட்டா பாஸ்புத்தகங்கள் வழங்கப்பட்டது. மின் விளக்கு, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. மேலும் மக்கள் வீட்டு வரி, தண்ணீர் வரி, நிலவரி போன்றவற்றை மாநகராட்சிக்கு தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய ஆவணங்களும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கைத்தான் வில்லவராயர் கொடுத்த நிலத்தை காளியப்ப நாடாருக்கு உள்வாடகைக்கு கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து அவரது மகன்கள் ராஜாராம், ரகுராம், விஷ்ணுராம் ஆகியோருக்கு பிரிக்கப்பட்டது. இதில் ராஜாராமுக்கு 1140, 1141 புல எண்களில் நிலம் கிடைத்தது.அவர் 1987ல் போலி ஆவணங்களை தயாரித்து, அந்த நிலங்களை பிளாட்களாக காட்டி, திருநெல்வேலி நகரமைப்பு துறையில் 96/87 என்ற பிளான் மூலம் அனுமதி பெற்று, 31 பிளாட்களை உருவாக்கினார். அதில் 28 பிளாட்களை விற்று விட்டார். மீதமுள்ள 3 பிளாட்கள் விற்பனை செய்ய முடியாமல் உள்ளன. இந்த 3 பிளாட்கள் குழந்தை ஏசு கோவில் பகுதி ரோட்டில் குடியிருக்கும் 15 வீடுகளின் பின்னால் உள்ளது. பாதை இல்லாததால் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் 2005 முதல் ராஜாராம் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கிறார்.மீனவ மக்கள் எதிர்த்து போராடி, மதுரை உயர்நீதிமன்றம் 22.12.2021ல் ‘இடைக்கால தடை தொடர்கிறது’ என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் திடீரென மாநகராட்சி, ராஜாராமுக்கு ஆதரவாக வீடுகள் சாலையில் இடையூறாக உள்ளன என்றும், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் வட்டாட்சியருக்கு உத்தரவு எழுதியுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க மாநகராட்சி முயற்சிக்கிறது. போலி ஆவணங்களின் அடிப்படையில் விற்ற பிளாட்களின் பதிவுகளை ஆய்வு செய்ய பத்திரப் பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.