November 28, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் சுதந்திர தின கிராமசபை கூட்டத்தில் முள்ளக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் உப்பு தொழிலாளர்கள் சார்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டது.

மேலும், உப்பு உற்பத்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களையும், அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மூலமாக மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து மனு அளித்தனர். சமீபத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் 18ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், தொழிற்சங்கத்தின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரமும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், ராஜபாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவாகர் உள்ளிட்டோர், தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, பொன்ராஜ், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.