December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரேபிஸ் தடுப்பூசி முகாம், தடுப்பூசி போட கட்டணமில்லா தொலைபேசி எண் – மேயர் ஜெகன் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ரேபிஸ் வெறி நாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட கட்டணமில்லா தொலைபேசி 18002030401எண் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு..

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து உலக வெறி நோய் தடுப்பு தினம் – ரேபிஸ் வெறி நாய் தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா, கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாநகர மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து மாநகரகப் பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. 

மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசிகள் போட வேண்டும். ஓட்டல்கள், வீடுகளில் மீதமாகும் உணவு பொருட்களை வீதிகளில் கொட்டக் கூடாது, இதனால் தெருநாய்கள் குழுவாக கூடி அங்கேயே தங்கிவிடும். இதனால் தெருவில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. மக்கள் இதனை தவிர்த்து வீதிகளையும் சுத்தமாக பராமரிக்க உதவ வேண்டும். 

மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டுமென்றால் மாநகராட்சியின் கட்டணமில்லாத இந்த #18002030401 எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காக்கள், மாநகர மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் தெருக்களுக்களிலும் நேரடியாக வந்து ரேபிஸ் தடுப்பூசி ஊசிகள் போடப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

முகாமில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா, கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவர் ஆபிரகாம் ஜாப்ரின், பிரதம மருத்துவர் பழனி, மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன், ஆய்வாளர் பிரியாங்கா, மற்றும் பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.