December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

18 வருடம் முன்பு செய்த தவறு.. தூத்துக்குடி சார் பதிவாளருக்கு மறக்க முடியாத தண்டனை

தூத்துக்குடி: கடந்த 2006ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ரூபாய் ஆயிரம் லஞ்சம் வாங்கியிருக்கிறார். அவருக்கு 18 வருடம் கழித்து, அதாவது அவருடைய 74 வயதில் வந்திருக்கிறது வில்லங்கம்.. 56 வயது வயதில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியவர், இப்போது தள்ளாத வயதில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளார். அவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

சில அரசு ஊழியர்கள் பத்திரப்பதிவு செய்ய, பட்டா பெயர் மாற்றம் செய்ய, நிலத்தை அளப்பதற்கு, குடிநீர், மின்சாரம் மற்றும் கிராமங்கள் நகரங்களில் வீட்டு தீர்வை மாற்றம் செய்ய உள்ளிட்ட அனுமதிக்கு லஞ்சம், அரசின் பல்வேறு சான்றிதழ்கள் பெற லஞ்சம் என பல வகைகளில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது . அப்படி லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தால், அவர்கள் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி, கையும் களவுமாக பிடிப்பார்கள்.

அப்படி சிக்கிய அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் வழக்கு விசாரணையின் போது கண்டிப்பாக நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லை என்று நிரூபித்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களுக்கு சிறை தண்டனை கிடைப்பது உறுதியாகிவிடும்.

அன்று 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் 3 ஆண்டுகள் சிறையில் கம்பி எண்ண போகிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் ஜோதிமணி (வயது 66), விவசாயி. இவர் கோரம்பள்ளம் பகுதியில் தனக்கு சொந்தமான 3.87 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்து வந்தார். இதற்காக கடந்த 21.9.2006 அன்று ஜோதிமணி 2 பிளாட்டுகளை விற்பனை செய்தார்.

அதனை மேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளராக இருந்த தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 74 வயதாகும் சின்னத்தம்பியை (அன்றைக்கு 56 வயது) அணுகினார்.

அப்போது சார்பதிவாளர் சின்னத்தம்பி, 2 பிளாட்டுகளையும் பதிவு செய்வதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து ஜோதிமணி, தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார்.

பின்னர் 22.9.2006 அன்று பத்திரப்பதிவுக்கு ஜோதிமணி சென்றுள்ளார். அங்கு சார் பதிவாளர் சின்னத்தம்பியிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக சின்னத்தம்பியை பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீண்ட வருடங்களாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசித்குமார், குற்றம் சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதானால் கடைசி காலத்திலும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்பதற்கு இந்த வழக்கு ஒருஉதாரணமாகும்.