December 1, 2025
#தூத்துக்குடி

தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3000 தீபாவளி போனஸ் – உடனடி நடவடிக்கை எடுத்த மேயர் ஜெகன்பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.3000 வழங்கப்படும் என மேயர் ஜெகன்பொியசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் சுமார் 1,500 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரி, திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்த மேயர் ஜெகன்பொியசாமி, உடனடியாக அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனமான அவர் லேண்ட் நிர்வாகத்துடன் தொலைபேசியில் பேசி, ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் ரூ.3000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நான் உங்களுடன் இருக்கிறேன் 

“நீங்கள் எதிர்பார்த்த போனஸ் வழங்கப்படும். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். நான் உங்களுடன் இருக்கிறேன்,” என மேயர் தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் இருந்த பணியாளர்கள் உறுதி மொழி ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். மேயர் ஜெகன்பொியசாமியின் தலையீட்டால் தீபாவளி போனஸ் வழங்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டதால், தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.