தூத்துக்குடி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, எல் பாஸ் சமூக சேவை அறக்கட்டளை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏரல் வட்டம் கொற்கை ஊராட்சியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ. தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன், மகளிர் திட்ட மேலாளர் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக எல் பாஸ் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அபிராமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் மல்லிகா கலந்து கொண்டு யோகா செய்வதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், யோகாசன கலை இந்தியாவில் தோன்றிய வரலாறு குறித்தும் விளக்க உறையாற்றினார்.
யோகா மாஸ்டரும் எல் பாஸ் சமூக சேவை அறக்கட்டளை மேலாண்மை இயக்குனருமான ராஜ்கமல் பெண்கள், வளர் இளம்பெண்கள், வயதானவர்களுக்கு உடல் நல ஆரோக்கியத்திற்கு ஏற்ற மூச்சுப்பயிற்சி, யோகா ஆசனமுறைகள், மன ஆளுமை போன்றவற்றை செயல்முறை விளக்கமாக பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உமாகனி, பேச்சிக்கனி, மாரியம்மாள், முத்துலட்சுமி, பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்து பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊரக வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மாரிதேவி, சிவசக்தி, பானு, முத்துஈஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை அறங்காவலர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

